THIRUKKURAL

Tuesday, April 23, 2013

ஜீவகாருண்யம்:



ஜீவகாருண்யம்:
 அனைத்து ஜீவன்களிடமும் கருணையோடு இருத்தல்.
உடனே  மாமிசம் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாதப்பா என்போம்.மாமிசம் சாப்பிடுவதைப் பற்றி பிறகு பார்ப்போம்;முதலில் மனிதர்களிடம் கருணை காட்டுங்கள்.அனைவரையும் நம் குழந்தைகள் போல் எண்ணுங்கள்.சகோதரனைப் போல என்றால் அப்பொழுது பங்காளிச்சண்டை என்பது நினைவுக்கு வரும்.விவேகானந்தர் மேலை நாடுகளுக்கு சென்று அங்கு அவர்களிடையே உரையாடும்போது,சகோதர சகோதரிகளே என்றார்.அது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆனால் இன்றைய சூழ்நிலையில் எல்லா சகோதர சகோதரிகளும் ஒற்றுமையாக இருப்பதில்லை. நமது குழந்தைகளைப்போல என்றால் அதில் பாசமே மேலோங்கும்.அனைவரையும் நமது குழந்தைகளைப் போல எண்ணுவோமேயானால் அனைவரிடமும் கருணையோடு இருக்க முடியும்.நமது குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால் அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாததைப் போல மற்றவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் அதை மன்னிக்கும் பக்குவம் வந்துவிடும்.மனிதரிடம் கருணைக் காட்டிப் பழகுவோமேயானால் தானாகவே மற்ற உயிர்களிடமும் கருணை காட்டும் பழக்கம் வந்து விடும்.பிறகு தானாகவே மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விடுவோம்.மனிதர்களிடம் கருணை காட்டிப் பாருங்கள்,உங்களுடைய எத்தனை எத்தனை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறதென்று! அப்படி எல்லோரிட்த்திலும் கருணை காட்டினால் நம் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் என்கிறீர்களா? முதலில்ஏழைகளிடத்திலும்,ஊனமுற்றோர்களிடத்திலும் கருணை காட்டிப் பாருங்கள்.அதுவே படிப்படியாக உங்களுக்கு வழிகாட்டும்.

மீண்டும் சிந்திப்போம்!

நேசம்



நேசம்:
நேசியுங்கள்! அனைத்தையும் நேசியுங்கள்!! நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை காணும் அனைத்தையும் நேசியுங்கள்.நேசம் என்றால் அன்பு காட்டுதல்;அனைத்தையும் விருப்புடன் பார்த்தல்.குழந்தைகளை நேசியுங்கள்; அவர்கள் செய்யும் அனைத்தையும் - அவர்களது குறும்புகளை,அவர்களது இயக்கங்களை,ரசியுங்கள். அதேபோல உங்களது பெற்றோர்களையும்,வயதான உங்கள் தாத்தா பாட்டிகளையும் நேசியுங்கள்.வயதானவர்களும் குழந்தைகளைப் போலத்தான்,ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்கள் குழந்தைகளுடைய மன நிலைக்கு வந்து விடுகின்றனர். எனவே அவர்களையும் நேசியுங்கள்.மற்றவர்களை நீங்கள் நேசிக்கும்போது அதனால் கிடைக்கும் பலன் என்ன என்பதை நேசித்துப் பாருங்கள் தெரியும். மற்றவர்களுடைய துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். சிறிதேனும் வருந்த முயற்சியுங்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.

மீண்டும் சிந்திப்போம்!

Sunday, April 21, 2013

சனி கவசம்



கரு நிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும்
ஒருபெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன் ஆதரித் தெம்மைக் காப்பாய்.
பொருளோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்.

ஏழரைச் சனியாய் வந்தும், எட்டினில் இடம் பிடித்தும்,
கோளாறு நான்கில் தந்தும், கொண்டதோர் கண்டகத்தில்
ஏழினில் நின்ற போதும், இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலத்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்!

பன்னிரு ராசிகட்கும் பாரினில் நன்மை கிட்ட,
எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறி வழிகள் காட்ட,
எண்ணெயில் குளிக்கும் நல்ல ஈசனே உன்னைத் துதித்தேன்
புண்ணியம் எனக்குத் தந்தே புகழ்கூட்ட வேண்டும் நீயே!

கருப்பினில் ஆடை ஏற்றாய்! காகத்தில் ஏறி நின்றாய் !
இரும்பின் உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!

சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம், பூசம், ஆன்றதோர் உத்ரட்டாதி,
இனிதே உன் விண்மீனாகும் எழில்நீலா மனைவி யாவாள்
பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்பதென்று சொல்வார்.

குளிகனை மகனாய்ப் பெற்றாய்! குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்துப் பிடித்துக் கொள்வாய்! விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச்செல்வாய் துணையாகி அருளைத் தாராய்.

அன்ன தானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தே
மன்னர்போல் வழ்வதற்கே மணியான வழிவகுப்பாய்.

மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே சனி என்றும் எங்கள் ஈசா!
வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்தபோதும் இனிய நாள் ஆக மாற்று!

 அன்புள்ளம் கொண்டோரே! 
இந்த சனி கவசத்தை சனிக்கிழமை காலையில் குளித்து விட்டு பூஜையறையில் அல்லது சாமி படத்தின் முன் அமர்ந்து பக்தியுடன் ஏழு முறை படித்தால்  சனீஸ்வரனின் அருளைப் பெறலாம்.
மீண்டும் சிந்திப்போம்!

ஏழு அதை நீ கேழு



ஏழு அதை நீ கேழு



ஏழு என்பது வேத மரபில் ஒரு முக்கிய எண்.ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.ஏழு என்பது இந்திய பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.ஏழு என்பது தமிழெண்களில் ’எ’ என்று குறிப்பிடப்படுகிறது.

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2.
எழு குன்றுகளின் நகரம் ரோம்
3.
வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4.
மொத்தம் ஏழு பிறவி
5.
ஏழு சொர்க்கம்(குரான்)
6.
ஏழு கடல்கள்

'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8.
ஏழு வானங்கள். (Qur'an)
9.
ஏழு முனிவர்கள் (Rishi)
10.
ஏழு ஸ்வரங்கள் (,ரி,,,,,நி)
11.
ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12.
ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு
13.
ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14.
கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15.
திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16.
மேலுலகம் ஏழு
17.
கீழுலகம் ஏழு

நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே -
திருமூலர் பாடல்

18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19.
மொத்தம் ஏழு தாதுக்கள்
20.
ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21.
ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22.
ஏழு புண்ணிய நதிகள்
23.
இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24.
அகப்பொருள் திணைகள் ஏழு
25.
புறப்பொருள் திணைகள் ஏழு
26.
சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27.
கடை ஏழு வள்ளல்கள்
28.
சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "
திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30.
ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31.
ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32.
மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33.
உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள்ஏழு.(1.மூலாதாரம்,2.சுவாதிஸ்டானம்,3.மணிப்பூரகம்,4.அநாகதம்,5.விசுத்தி,6.ஆக்ஞா,7.சஹஸ்ராஹாரம்)
34.
பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் பெண்)

எண் ஏழின் முக்கியத்துவம் பலவிதம்.

சமீபத்தில் ஒரு விஞ்ஞானி ஒரு மனிதன் தன்னிடம் காண்பிக்கப்பட்ட எந்த ஒரு பட்டியலிலும் ஏழு காரியங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார். 'அதனால்தான், ஏழு என்கிற காரியம் நாம் இருக்கிற இந்த உலகில் அடிக்கடி காணப்படுகிறது. உதாரணமாக,  ஏழு உலக அதிசயங்கள்,  ஏழு ஸ்வரங்கள்,  ஏழு கடல்கள்,  கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு, வாரத்தில் நாட்கள் ஏழு,  வானவில்லின் நிறங்கள் ஏழு.' என்று கூறினார்.

ஏழாம் அறிவிற்கும் ஆன்மாவின் ஏழு திரைக்கும் என்ன சம்பந்தம்?

உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ளது.

இந்த ஆறறிவை பற்றி தொல்காப்பியர் அழகாக சொல்லியிருக்கிறார்.

ஓரறிவு என்பது தொடு உணர்வையும் 

இரண்டாவது அறிவு என்பது சுவை உணர்வையும் 

மூன்றாவது அறிவு என்பது  முகர்ந்து அறியும் அறிவையும் 

நான்காவது அறிவு என்பது பார்த்து  அதன் மூலம் அறியும் அறிவையும்

ஐந்தாம் அறிவு என்பது கேட்டு அதன் மூலம் அறியும் அறிவையும் 

ஆறாம் அறிவு என்பது பகுத்து பார்த்து அதன்  மூலம் அறியும் அறிவைக் குறிக்கின்றது.

அப்பொழுது ஏழாம் அறிவு என்பது

அது ஏழுத்திரைகளை கடந்து சென்றால் கிடைக்கும் அறிவு.

தன்னை யார் என்று,இயற்கையை யார் என்று, இறைவனை யார் என்று  அறிதலே ஏழாம் அறிவு.

ஆன்மாவானது ஏழு திரைகளுக்கு அப்பால் உள்ளதாக  வள்ளலார்  கூறுகிறார்.

அதாவது ஏழு திரைகள் ஆன்மாவை மறைத்து கொண்டுள்ளது. இந்த ஏழு திரைகளை கடக்கும் பொழுது அவன் ஆன்மாவைக்காணலாம்  அதன் மூலம் ஏழாம் அறிவை பெறலாம்.

முதலில்  கறுப்புத்திரை - இதை நீங்கள் தூங்கும் பொழுது காணும் திரை என்று சொல்லாம் அல்லது தியானத்தின்  தொடக்கத்தில் காணும் திரை இதுதான். இது மாய சக்தியால் ஆனது என்று சொல்லப்படுகிறது. இவ்வுலகம் மாயையால் ஆனது மாயை உங்களை ஆட்கொண்டிருக்கும் வரை இந்த திரை மட்டுமே உங்களுக்கு தெரியும்.

இதையும் தாண்டி நீலத்திரை கிரியா சக்தியையும்,

பச்சைத்திரை  பராச்கதியையும்,

சிவப்புத்திரை இச்சா சக்தியையும்,

பொன்மைத்திரை ஞான சக்தியையும்,

வெண்மைத்திரை ஆதி சக்தியையும்,

 கலப்புத்திரை சித் சக்தியையும்

குறிப்பாதாக வள்ளலார் கூறுகிறார்.

இந்த ஏழு திரைகளையும் நம்முள் காண முடியும். இந்த ஏழு திரைகளையும் தாண்டினால் இறைவனை காணலாம்.

ஒருவரின் தியானத்தை பொருத்தும், ஒருவர்  பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை(அல்லது தியானத்தை) பொருத்தும் ஒருவர் இத்திரைகளை வெகு சுலபமாகவோ அல்லது பல காலங்கள் கடந்தோ கடக்க நேரிடும். 

இத்திரைகளை கடந்து ஆன்மா அல்லது இறைவனை கண்ட பிறகு கிடைக்கும் அறிவே  ஏழாம் அறிவாகும்.

நமது சித்தர்கள் இந்த ஒளி பொருந்திய பாதையில் தான் பயணம் செய்தார்கள் என தெரிய வருகிறது.தன்னை இறைவன் என்று கூறுபவர்களும், இறைத்தூதன் என்று கூறுபவர்களும் இவ்வழியிலே சென்றதாக தெரிகிறது.

இந்த ஏழு உலகம் என்பது நம்முள் உள்ள ஏழு சக்கரங்களா அல்லது நமதருகில் உள்ள ஏழு கோள்களா அல்லது ஏழு பிரபஞ்சமா என்று ஆராயவேண்டும்.

ஜோதிடத்தில் ஏழாம் எண்ணுக்குறியவன் கேது. கேது ஆதிக்கத்தில் உள்ளவர்கள் தத்துவ ஞானிகளாகவும், சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள்.

மீண்டும் சிந்திப்போம்!


Tuesday, April 9, 2013

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை



வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை:
1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.
2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.
3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையி 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.
4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.
5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.
6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக்கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக்கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.
9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
11. பருப்பு வகைகளில் துவரம்பருப்பை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.
13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.
14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.
15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவகாரங்களைப் பற்றிப் பேசலாம்.
16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.
17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக்கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.
18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது | ஒரே இரவில்.
20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.
21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குமேல் உறங்கக்கூடாது.
22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.
23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.
25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.
26. புகை, கஞ்சா, கள், சாராயம் போன்றவை கூடாது.
27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.
வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிவிடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:

"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."