THIRUKKURAL

Thursday, September 26, 2013

பித்ருக்களது உலகம்.






பித்ருக்களது உலகம்.
புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது. மஹாளய அமாவசைக்கு முன் வரும் தேய் பிறைக் காலத்தைப் "பித்ரு பக்ஷம்என்று அழைப்பார்கள். அதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லும் புராணக் கதைகள், தர்ம சாஸ்திர நூல்கள் பல இருக்கின்றன. வானவியல் ரீதியில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறான். அதாவது இந்த மாதத்தில் நாம் சூரியனைப் பார்க்கும் இடத்தில் கன்னி ராசி இருக்கும். கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நாமிருக்கும் சூரிய மண்டலமும், நம்மைச் சுற்றியுள்ள பிற நக்ஷத்திர மண்டலங்களும் கன்னி ராசியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன.
நாமிருக்கும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நம்மையும் சேர்த்து சூரிய மண்டலம், நம் பக்கத்தில் உள்ள சில நக்ஷத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது. அந்த மையத்தைப் போல பல சிறு மையங்கள் ஒருங்கிணைந்து கன்னி ராசியை மையமாக வைத்துச் சுற்றி வருகின்றன. இந்தச் சுழற்சி வரை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
பொதுவாகவே மையம் என்பது ஒரு ஆதாரமாகச் செயல்படுகிறது. பூமிக்கு மையம் சூரியன். அதுவே பூமிக்கு ஆதாரம் ஆகும். எப்படி என்றால், அந்தச் சூரியனிலிருந்துதான் பூமி முதலான கிரகங்கள் உண்டாகின. அந்தச் சூரியன் தரும் சக்தியால்தான் பூமியில் உயிர்கள் நிலை பெற்று இருக்கின்றன. இந்தக் கருத்து, படிப்படியாக ஒவ்வொரு மையத்துக்கும் பொருந்தும். அப்படிப் பார்க்கும் பொழுது கன்னி ராசி என்னும் மண்டலமே நமக்கு ஆதாரமாகிறது. எப்படி பூமியானது சூரியனிலிருந்து உண்டாகி, சூரியனால் வாழ்விக்கப்படுகிறதோ, அப்படியே, நாமிருக்கும் மண்டலம், கன்னி ராசியிலிருந்து உண்டாகி அதனால் வாழ்விக்கப்படுகிறது என்று சொல்வது பொருந்தும்.
ஒரு மையத்திலிருந்து உண்டானது, பிரளய காலத்தின் போது, படிப்படியாக, அந்த மையத்துக்குள் ஒடுங்கும். நாமிருக்கும் பூமி சூரியனில் ஒடுங்கும், சூரிய மண்டலம் அதற்கடுத்த மையத்தில் ஒடுங்கும். அந்த மையம் கன்னி ராசியில் ஒடுங்கும்.
மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், உடலை விட்டுப் பிரிந்த உயிர், இந்தக் கன்னி ராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். எனவேதான், கன்னி ராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ரு யானம்” (பித்ருக்களின் வழி) என்பார்கள்.
இந்தக் கன்னி ராசி தென் திசையில் இருக்கிறது. இங்கு ஒரு கேள்வி எழலாம். பூமியில்தான் தெற்கு வடக்கு போன்ற திசைகள் இருக்கின்றன. பூமிக்கு வெளியே சென்றுவிட்டால் ஏது திசை? முடிவே இல்லாத பிரபஞ்சத்துக்கு ஏது திசை?
இதை கண்டு பிடிக்க ஒரு வழி இருக்கிறது. துருவ நக்ஷத்திரம் தெரியும் வட துருவப் பகுதி வடக்காகும். அதற்கு நேர் எதிரே இருக்கும் துருவப் பகுதி தெற்காகும். இந்த இரண்டு துருவங்களையும் இணக்கும் ஒரு கற்பனைக் கோடு பூமியின் அச்சு எனப்படும். பூமிக்கு வெளியிலிருந்து பார்த்தாலும் இந்த அச்சை அடையாளம் கண்டு, எது வடக்கு, எது தெற்கு என்று சொல்ல முடியும். இங்குதாம் ஒரு அதிசய ஒற்றுமை இருக்கிறது.
கன்னி ராசியானது , பூமியின் தென் துருவத்துக்குக் கீழ் தென்படுகிறது. அதாவது அந்த ராசி தெற்குத் திசையில் இருக்கிறது. அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உண்டானதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது. நாம் உண்டான மையம் தெற்குத் திசையில், கன்னி ராசியில் இருக்கவே, இறந்த பிறகு அந்தத் திசையில் உள்ள மண்டலத்தில், நமது பித்ருக்கள் வாழ்கிறார்கள். எனவே அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்கிறோம். அந்தத் திசையில் சூரியன் சஞ்சரிக்கும் போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம்.
இதை அடுத்து ஒரு கேள்வி எழலாம். இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம், அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது. அப்படி இருக்க இந்த பித்ரு பக்ஷம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் பித்ருக்களது காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.
சூரியனை முன்னிட்டு சௌரமானம் என்று சூரிய வருடம் இருப்பது போல, சந்திரனை முன்னிட்டு சந்திரமானம் என்னும் சந்திர வருடம் இருப்பது போல, பித்ருக்களுக்கு பித்ருமானம் என்னும் பித்ரு வருடம் இருக்கிறது. அது சந்திரனை முன்னிட்டுச் சொல்லும் திதிக்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அதைப் பின் வருமாறு விளக்கலாம்.
வளர் பிறை = தேய் பிறை = 1 பக்ஷம் = 15 திதி
2 பக்ஷம் = 1 பித்ரு நாள் (நமக்கு இது ஒரு சந்திர மாதம்)
30 பித்ரு நாள் (60 பக்ஷம்) = 1 பித்ரு மாதம்.
12 பித்ரு மாதம் (720 பக்ஷம்) = 1 பித்ரு வருடம்.
இதைத் திதியாக மாற்றினால்,
1 பித்ரு வருடம் = (720 பக்ஷம் X 15 திதி) = 10,800 திதி.
1 சந்திர வருடத்தில் 360 திதிக்கள் இருக்கவே,
10,800 திதி / 360 திதி = 30 வருடம்
அதாவது நம்முடைய சந்திரமானக் கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களுக்கு ஒரு வருடம் என்பதாகும்.
ஒருவன் 30 வருட காலம் தன் பித்ருவுக்குச் சிரார்த்தம் செய்தால், பித்ருவின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்றாகும். அவ்வளவு காலக்கட்டம் ஒருவர் சிரார்த்தம் செய்யும்படி அமைவது மிகவும் அபூர்வம். அதனால், பித்ரு உலகமான கன்னி ராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பக்ஷத்தையும் பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்கு ஒதுக்கியுள்ளார்கள்.
தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், அதுதான் பிருக்களது பகல்  
 காலம். அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலக்கட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பக்ஷத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம். இந்த பக்ஷத்தில் நாம் செய்யும் வழிபாடு, சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது. இவ்வாறு அனைத்து ஜீவர்களையும் அரவணைக்கும் பாங்கு நம் முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல விஞ்ஞானத்தையும், மெய்ஞ்ஞானத்தையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் மக்கள் சமுதாயத்துக்கு உயர்ந்த பலன்களையும் தரும் பாங்கு நம் இந்து மதத்துக்கு மட்டுமே உரியது. 

நன்றி-ஜெயஸ்ரீசாரநாதன்