THIRUKKURAL

Tuesday, April 9, 2013

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை



வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை:
1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.
2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.
3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையி 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.
4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.
5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.
6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக்கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக்கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.
9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
11. பருப்பு வகைகளில் துவரம்பருப்பை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.
13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.
14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.
15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவகாரங்களைப் பற்றிப் பேசலாம்.
16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.
17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக்கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.
18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது | ஒரே இரவில்.
20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.
21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குமேல் உறங்கக்கூடாது.
22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.
23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.
25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.
26. புகை, கஞ்சா, கள், சாராயம் போன்றவை கூடாது.
27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.
வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிவிடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:

"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."