அரிது அரிது மானிடராய் பிறத்தலறிது என்ற அவ்வையின் சொல்லிற்கேற்ப நாம் மானிடராய்ப் பிறந்துள்ளோம்.மனிதப்பிறவி ஒன்றிற்கே மனம் என்று ஒன்று உண்டு;அதில் சிந்திக்கும் ஆற்றலும் உண்டு.அந்த சிந்திக்கும் ஆற்றலை வைத்து மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.மனதை நம் வசப்படுத்தி விட்டால் பிறகு அதை நம் விருப்பத்திற்கு செயல்படுத்தலாம்.மனம் போன போக்கிலே நாம் போகக்கூடாது. நம் போக்கிலே தான் மனம் வர வேண்டும்.
இது மருந்து மாத்திரைகளினால் செய்யக்கூடியது அல்ல.ஒன்று தானாக இறைவனருளால் வரவேண்டும்.அல்லது நாமே பயிற்சியின் மூலமாக சிறிது சிறிதாக கொண்டு வரவேண்டும்.அந்த நிலை வர வர கோபம் கட்டுப்படும்,கவலையோ வருத்தமோ நம்மை பாதிக்காது.உள்ளம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் பிறகு உடலையும் சிறிது சிறிதாக நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடலாம்.
அதன்பிறகு நம் உடலில் உள்ள நோய்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.இருக்கும் நோய்களை அதிகமாகாமல் குறைக்கவும்,புதிதாக நோய்கள் வராமல் தடுக்கவும் செய்யலாம்.திடீரென்று தோன்றும் நோயாக இருந்தால் அதை குணமாக்கவும் செய்யலாம்.
மனதை கட்டுப்பட்டிற்குள் வைத்துக்கொண்டால் (பயம்,கோபம்,கவலை,வருத்தம்,அதிர்ச்சி போன்றவை இல்லாமல்) நம் உடலில் உள்ள நோய் கூட அதன் தீவிரத்தை குறைத்துக்கொள்ளும்.அதற்கான வழி முறைகளை தெரிந்தவர்களிடம் சரியான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒரு மனிதனும் துன்பத்தை விரும்புவதில்லை.துன்பம் என்பது கவலை,வருத்தம்,பயம்,கோபம்,அதிர்ச்சி மன விளைவுகளினால் வருவது.துன்பமில்லா வாழ்க்கை வாழ நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.இதன் மூலம் துன்பத்தின் தாக்கத்தையாவது குறைத்துக்கொள்ளலாம்.
மீண்டும் சிந்திப்போம் !
No comments:
Post a Comment