THIRUKKURAL

Thursday, November 28, 2024

எல்லாம் அவன் செயல்- எப்படி?
            எல்லாம் அவன் செயல்- எப்படி? எல்லாம் அவன் செயல் என்றால் தீமைகள் எப்படி ஏன் நடக்கின்றன ? இதற்கான பதிலை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாயினால் கேட்போம்.
            மகாபாரதத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் உடன் இருந்த
                  ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் அவ்வளவு பெரிய யுத்தம் நடக்க விட்டார்.


            பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
             தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்ன
வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?" என்றார் உத்தவர்.
             உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்
வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று,துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா? என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
            இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
            பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்" என்றான் கண்ணன்.
            உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான். "துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்என்றான் துரியோதனன். அது விவேகம்.
            தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்என்றுவேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம்எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
 "அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?" என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட,
ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா?"
 புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"
நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள்
செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத்
தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.
            "உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன். உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை.
                                                                    புரிந்ததா?


கந்த சஷ்டி கவசம்
[கந்த சஷ்டி கவசம் (16ஆம் நூற்றாண்டு) 
பால தேவராயன சுவாமிகள் ]


காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Monday, September 3, 2018

உலகநீதி - உலகநாதன் - 13

உலகநீதி - உலகநாதன் - 13
உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
உலகநீதி எனும் இப்புராணத்தை உரைப்பதற்கு கலைகளின் உருவாய் இருக்கும் யானை முகனே துணை
1. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: கல்வி பயிலாமல், கற்றதை மனனப்பயிற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.
பிறர்மீது பழி கூறக்கூடாது. அம்மாவை மறக்கக்கூடாது. தீயவர்களோடு சேரக்கூடாது. தகாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை கூறக்கூடாது.வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, வலிமை பெற்ற முருகப் பெருமானை போற்றுவாய் மனமே.

2. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: தெரிந்தே பொய் கூறக்கூடாது. நடக்காது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்த முயலக் கூடாது. பாம்போடு விளையாடக்கூடாது. பண்பு இல்லாரோடு பழகக்கூடாது. தனியாக ஒருவரும் இல்லாத வழியில் செல்லக் கூடாது. பிறர் கெடுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. மனமே! மலைநாட்டின் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.

3. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது. பகைவனை உறவென்று கொள்ளக் கூடாது. பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது.  தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது. துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது.  கோபத்தோடு இருப்பவரிடம் செல்லக்கூடாது.  மனமே! காட்டில் விலங்குகளைத் தேடித் திரிகின்ற குறவர் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.

4. குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பொருள்: பிறரிடம் எப்போதும் குற்றங்களையேப் பார்க்கக் கூடாது. கொலை, திருட்டு செய்பவரோடு சேரக்கூடாது. படித்தவர்களை இகழக்கூடாது. பிறன் மனைவியை நினைக்கக் கூடாது.  ஆட்சிசெய்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது. மனமே! வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, நிகரில்லாத முருகப் பெருமானை போற்றுவாய்.

5. வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: மனையாளோடு வாழாமல் பிறபெண்களைத் தேடி அலையக் கூடாது. மனைவியைக் குறை கூறக்கூடாது. தீய பழக்கங்களில் விழுந்து விடக் கூடாது. கடும்போரில் பின்வாங்கி ஓடக்கூடாது.  கீழானவர்களோடு சேரக்கூடாது.  அவர்களைக் குறை கூறக் கூடாது. மனமே! பெருவாழ்வு வாழும் குறவர் மகளான வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.

6. வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே
பொருள்: பிறரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர் பேச்சைக் கேட்க வேண்டாம். நம்மை மதிக்காவர்கள் இல்லத்திற்கு செல்லக் கூடாது. அனுபவஸ்தர்களான பெரியோரின் அறிவுரைகளை மறக்கக் கூடாது.  எதற்கெடுத்தாலும் கோபப்படுபவரோடு சேரக் கூடாது.  கல்வியறிவு தந்த ஆசிரியர் சம்பளத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது.  திருடர்களோடு கூட்டு சேரக்கூடாது. மனமே! வல்லமையால் புகழ் சேர்த்த வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.

7. கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.
பொருள்: எண்ணித் திட்டமிடாமல் கார்யங்களை செய்யக் கூடாது. நம் நஷ்டங்களை பிறரிடம் கூறக்கூடாது.  போர்க்களத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது.  புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடாது.  இரண்டாம் மணம் புரியக் கூடாது.  எளியார் என்று பகைமை கொள்ளக் கூடாது.  நெஞ்சே! தினைப் புனம் காக்கும் ஏழைப் பங்காளன் குமரவேள் பாதத்தைப் போற்று.

8. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: தகாத இடங்களுக்குப் போகக் கூடாது.  ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது.  எல்லாரையும் பற்றி கோள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது.  நமக்கு வேண்டியவர்களை அலக்ஷ்யமாய்ப் பேசக்கூடாது.  பெருமை தரும் கார்யங்களைத் தவிர்க்கக் கூடாது.  கெட்ட செயல்களுக்குத் துணை போகக் கூடாது. நெஞ்சே! பெருமை பெற்ற குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.

9. மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: நிலத்திலேயே வாழ்ந்து கொண்டு நிலத்தகராறில் ஒருசார்பாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது.  மனம் சலித்து எவரோடும் சண்டை செய்யக் கூடாது.  நம் துயரை எவரிடமும் அழுது தெரிவிக்கக் கூடாது.  பார்க்காத ஒன்றைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்து கூறக்கூடாது.  பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது.  கோள் சொல்லிக்கொண்டு அலைபவரோடு சேரக்கூடாது.  நெஞ்சே!  உலகளந்த விஷ்ணுவின் தங்கையான உமையாளின் மைந்தன், மயிலேறும் நம் தலைவன் முருகப் பெருமானைப் போற்று.

10. மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே.
பொருள்: வீண்பேச்சு பேசி வலுச்சண்டை தேடுபவரோடு சேரக்கூடாது.  பொய் சாக்ஷி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது.  தெய்வத்தை மறக்கக்கூடாது.  இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது.  நம்மை ஏசிய உற்றாரிடம் உதவி கேட்கக்கூடாது. மனமே! குறி கூறும் குறவள்ளி மணவாளன், முருகப் பெருமான் நாமத்தைக் கூறுவாய்.

11. அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.
பொருள்: ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது.  வண்ணான், க்ஷவரத் தொழில் செய்பவன், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்யார், ப்ரஸவம் பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்திய மருத்துவன் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ?

12. கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: ஒரு குடும்பத்தைப் பிளவு செய்து கெடுக்கக் கூடாது.  கண்ணில் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே வேலையாகக் கொள்ளக் கூடாது.  தீயவர் நட்பு கூடாது.  தெய்வத்தை இகழக்கூடாது.  பெரியோரை வெறுக்கக் கூடாது.  நெஞ்சே!  குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.

13. ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந்தேடி
பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.
பொருள்: பலரைப் போற்றி, பலவகையில் பொருள் தேடிய உலகநாதனாகிய நான் கற்றகல்வியால், அருந்தமிழில் முருகனைப் பாட வேண்டி, அவன் திருவருளால் உலகநீதியை உண்மையாய்ப் பாடிவைத்தேன்.  இதனை விரும்பி, பொருள் தெரிந்து, நாள்தோறும் கற்றோரும், கேட்டோரும் பூலோகம் உள்ளளவும் களிப்போடும், புகழோடும் வாழ்வார்களாக.

Friday, February 12, 2016

வெற்றி வேற்கை - அதிவீர ராம பாண்டியன் - 82

1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் - கல்வி கற்பித்த ஆசான் இறைவன் ஆவான்
2. கல்விக்கு அழகு கசடற மொழிதல் - குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு.
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் - சுற்றத்தோடு கூடிய பெருங்குடும்பத்தை வகிப்பதே செல்வர்க்கு அழகு
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் - வேதம் ஓதுவதும், ஒழுக்கத்தோடு இருப்பதுமே ப்ராம்மணர்களுக்கு அழகு.
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை - நீதி தவறாது முறையோடு அரசு செய்வதே அரசர்க்கு அழகு.
6. வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல் - குன்றாத செல்வத்தை சேர்ப்பதே வைச்யர்க்கு அழகு
7. உழவர்க்கு அழகு இங்குஉழுது ஊண் விரும்பல் - விவசாயம் செய்து உண்பதே உழவர்க்கு அழகு
8. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் - வரப்போவதை முன்கூட்டியே ஆராய்ந்து உரைப்பதே மந்திரிக்கு அழகு
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை - அஞ்சாமையும், வீரமுமே தளபதிக்கு அழகு.
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் - விருந்தினரோடு உண்பதே உணவிற்கு அழகு
11. பெண்டிற்கு அழகு எதிர் பேசாதிருத்தல் - எதிர்த்துப் பேசாமலிருப்பதே பெண்களுக்கு அழகு
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல் - கணவனைப் பார்த்துக் கொள்வதே குடும்பப் பெண்ணுக்கு அழகு
13. விலைமகட்கு அழகு தன்மேனி மினுக்குதல் - உடலைப் பிறர் கவரும் வண்ணம் அலங்கரித்துக் கொள்வது விலைமாதர்க்கு அழகு
14. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் - கல்வி பயின்று, ஆய்ந்தறிந்த அறிஞர்க்கு அழகு அடக்கமாக இருப்பது.
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை - வறுமையில் வாடும்போதும் ஒழுக்கமாக இருப்பது வறியவர்களுக்கு அழகு
16. தேம்படு பனையின் திரள் பழத்து ஒருவிதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவருக்கு இருக்க நிழலாகாதே
பொருள்: சுவைமிக்க பெரும் பழத்தின் விதையில் வானுயர வளர்ந்தாலும், பனைமரம் ஒருவருக்கும் நிழல் தராது.
17. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவிஆள் பெரும் படையோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே.
பொருள்: ஆலமரத்தின் சிறிய பழத்தின் விதை, தெளிந்த நீர்கொண்ட குளத்து மீனின் முட்டையை விட சிறியதே ஆயினும், பெருமை மிக்க யானை, அலங்கரித்த தேர், காலாட்படையோடு கூடின மன்னர்க்கு நிழல் தரும்.
18. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் - உருவத்தில் பெரியவராக இருப்பவரெல்லாம் பெரியவர்கள் இல்லை.
19. சிறியோர் எல்லாம் சிறியரும் இல்லர் - உருவத்தில் சிறியவராக இருப்பவரெல்லாம் சிறியவர்கள் இல்லை.
20. பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர் - நாம் பெற்ற எல்லா பிள்ளைகளுமே பிள்ளைகளாக இருக்க மாட்டார்கள்.
21. உற்றோரெல்லாம் உறவினர் அல்லர் - எல்லா உறவினரும் உண்மையில் உறவினர் இல்லை.
22. கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர் - மணம்புரிந்து கொண்ட எல்லாரும் மனைவிகள் அல்ல
23. அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது - சுண்டக் காய்ச்சினாலும், பசுவின் பால் சுவை குறையாது.
24. சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது - நெருப்பிலிட்டு வாட்டினாலும் சுத்தமான பொன் ஒளி குறையாது
25. அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது - நன்றாக அரைத்தாலும் சந்தனத்தின் மணம் குறைவதில்லை
26. புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது - எவ்வளவு புகைத்தாலும் கரிய அகில்கட்டை துர்மணம் வீசாது
27. கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது - எவ்வளவு கலக்கினாலும் குளிர்ந்த கடல் சேறு ஆகிவிடாது.
28. அடினும் பால்பெய்து கைப்பு 
அறாது பேய்ச் சுரைக்காய் 
பால் விட்டுக் காய்ச்சினாலும், பேய்ச்சுரைக்காய் கசப்பு நீங்காது
29. ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது - பலவித வாசனைகளை சேர்த்தாலும், உள்ளிப்பூண்டு நறுமணம் வீசாது
30. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே - நம் நடத்தையால் தான் நமக்கு மேன்மையும், கீழ்மையும் வரும்
31. சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்
பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே
சிறியவர்கள் செய்யும் சிறு, சிறு பிழைகளையெல்லாம் பெரியவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்
32. சிறியோர் பெரும்பிழை செய்தனராயின்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே
சிறியோர் செய்யும் பிழைகள் பெரிதாக இருந்தால், பெரியோர்கள் அதை பொறுத்துக் கொள்ளல் அரிது.
33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே
நூறாண்டுகள் பழகியிருந்தாலும் முரடர்களின் நட்பு நிலைக்காது.  அது நீரிலிருக்கும் பாசி போல் வேர் ஊன்றாது.
34. ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர் வீழ்க்குமே
ஒருநாள் பழகியிருந்தாலும் பெரியோரின் நட்பு, நிலத்தைப் பிளந்து செல்லும் வேர் போல ஊன்றிடும்
35. கற்கை நன்றெ கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
பிச்சையெடுத்தாவது கல்வி கற்பதே நல்லது
36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகுமே
கல்வியறிவில்லாத ஒருவன் தன் குலப்பெருமை பேசுவது நெல்லுக்கு நடுவே தோன்றும் குப்பைச் செடி போன்றது.
37. நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே
நான்கு வர்ணங்களில் மேல் வர்ணத்தவனான ஒருவன் கல்லாதவனாக இருந்தால் அவன் கடையனே
38. எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வருக என்பர்
கற்றவர்கள் எந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களை மற்ற கற்றவர்கள் மேலே வரவேற்று ஏற்றுக் கொள்வார்கள்
39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் - அறிஞனை அரசனும் விரும்புவான்
40. அச்சம் உள்ளடக்கி அறிவு அகத்துஇல்லாக் 
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்றே
பயந்தாங்கொள்ளியான, அறிவில்லாத, உபயோகமற்ற பிள்ளைகளைப் பெறுவதை விட ஒரு குடும்பம் சந்ததியே இல்லாமலிருப்பதே மேல்.
41. யானைக்கு இல்லை தானமும், தர்மமும் -  நீளமான கையிருந்தும் யானை தான, தர்மம் செய்வதில்லை.
42. பூனைக்கு இல்லை தவமும் தயையும் - கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் பூனை தவமும், தயையும் கொள்வதில்லை
43. ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும் - மெய்யறிவுள்ளோர்க்கு இன்ப, துன்பங்களில்லை
44. சிதலைக்கு இல்லை செல்வமும், செருக்கும் - செல்வத்திலும், சுவடிகளிலுமே இருந்தாலும் கரையானுக்கு அதனால் பணவசதியும், கர்வமுமில்லை. அது இரண்டையுமே அழித்து விடும்
45. முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும் - ஓட்டமோ, நிலைத்ததோ. முதலைக்கு எல்லா நீரும் ஒன்றுதான். எங்கும் அது மூர்க்கமாகவே இருக்கும்
46. அச்சமும் நாணமும் அறிவு இல்லோர்க்கு இல்லை - கல்லார்க்கு எதைப் பற்றியும் பயமோ, வெட்கமோ இல்லை
47. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை - வசதியில்லாதவர்க்கு எல்லா நாளும் ஒன்றுதான்
48. கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை - கெட்டவர்களுக்கு நட்பும், சுற்றமும் இல்லை
49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா - செல்வமும், வறுமையும் ஓரிடத்திலேயே இருக்காது
50. குடைநிழலில் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து ஓர்ஊர் நண்ணினும் நண்ணுவர்
யானைமீதமர்ந்து வெண்கொற்றக்குடையின் கீழ் சென்றோரும், பிழைப்புக்காக வேற்றூருக்கு தள்ளாடி நடந்தே செல்ல நேரிடும்.
51. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்
சிறப்பும் செல்வமும் பெருமையும் உள்ளவர்களும் உணவிற்கு தர்ம சத்திரத்தை அடையும் காலம் வரலாம்.
52. அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்
பிறர் தர்மத்திற்காக இடும் பிச்சையை கேட்டு வாங்கி உண்போரும் அரசராகும் காலம் வரலாம்
53. குன்று அத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றே பகலே அழியினும் அழிவர்
இரு பெரு மலையளவு செல்வம் உள்ளவர்களும் ஒரே பகலில் அழிந்தாலும் அழிந்து விடுவர்
54. எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்
கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்
ஏழடுக்கு மாட மாளிகையும் அடியோடு சாய்ந்து கழுதை மேயும் பாழ் நிலமானாலும் ஆகும்.
55. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்
காளை மாடும், கழுதையும் மேய்ந்து கொண்டிருந்த பாழ்நிலமும், பொன் வளையல்கள் அணிந்த மகளிரும், ஆண்களும் கூடி வாழும் நெற்குவியல் மிக்க பெரு நகரமானாலும் ஆகலாம். 
56. மண அணி அணிந்த மகளிர் ஆங்கே
பிண அணி அணிந்து தம்கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடியாக
முடிந்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
கல்யாண ஆடை அணிந்த மகளிரும் அன்றே அதே ஆடை கோடி ஆடையாகி விதவைக் கோலம் பூண்டு, தன் கணவனைத் தழுவி முடிந்த கூந்தலை விரித்து அழுதாலும் அழுவர். 
57. இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே - இல்லாதவர் பிச்சை கேட்பது இயற்கையே
58. இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே - இல்லையென்று பிச்சையெடுப்பவர்க்கு பிச்சையிடுவது செல்வம் உடையவர்க்குக் கடமையே.
59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே
பூமியும், வானும் அடைந்தாலும் மனையாள் இல்லாதவர் ஒன்றும் இல்லாதவரே
60. தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறுகண் மூங்கில் கோற்கு அஞ்சுமே
அச்சமில்லாத பெரிய யானையும், சிறு கணுக்களை உடைய மூங்கில் கோலுக்கு அஞ்சும்.
61. குன்றுடை நெடும் காடு ஊடே வாழினும்
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சுமே
மலைகளோடு கூடிய பெருங்காட்டில் வாழ்ந்தாலும், சிறுதலை உடைய மானானது புலிக்கு அஞ்சும்
62. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிக அஞ்சுமே
ஆரைப்பூண்டு மிகுந்த பள்ளத்தில் வாழ்ந்தாலும் தேரைக்கு பாம்பென்றால் பயமே.
63. கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் 
கடும்புலி வாழும் காடு நன்றே
கொடுங்கோல் ஆட்சி செய்யும் நாட்டை விட, கடும் புலி வாழும் காடு நல்லது.
64. சான்றோர் இல்லா தொல் பதி இருத்தலின் 
தேன் தேர் குறவர் தேயம் நன்றே
சான்றோர் இல்லாத பழைய ஊரை விட, தேனைத் தேடித் திரியும் குறவர் நாடு நல்லது
65. காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்பர் அனைவரும் பதரே - இருவேளையும் வேதம் ஓதாத அந்தணர் பதரே
66. குடி அலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற 
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே
இறைவனுக்கு ஒப்பான அரசனும், குடிமக்களை வருத்தி அவர் பொருள் பறித்து கொடுங்கோலாட்சி செய்தால் அந்த மூர்க்கனும் பதரே
67. முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து 
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே
மூலதனம் இருந்தும் அதனால் வாணிபம் செய்து உண்ணாத வணிகரும் பதரே
68. வித்தும் ஏரும் உளவா இருப்ப
எய்த்து அங்கிருக்கும் ஏழையும் பதரே
விதையும், ஏரும் தயாராக இருந்தும், அதனைக் கொண்டு உழவாத சலித்திருக்கும் உழவனும் பதரே
69. தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றிப் 
பின்பு அவள் பாராப் பேதையும் பதரே
மனைவியை அவள் தாய் வீட்டுக்குத் துரத்தி விட்டு, திரும்பியும் பார்க்காத மடையனும் பதரே.
70. தன் மனையாளைத் தனி மனை இருத்தி
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே.
மனைவியைத் தனியே வீட்டில் விட்டு விட்டு, அடுத்தவளைத் தேடும் மடையனும் பதரே
71. தன் ஆயுதமும் தன் கையிற் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே
தொழிலுக்கு வேண்டிய தன் கருவியையும், தன் செல்வத்தையும் அடுத்தவனிடம் கொடுக்கும் மடையனும் பதரே
72. வாய்ப் பறையாகவும் நாக்கு அடிப்பாகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்
வாயையே பறையாகவும், நாக்கை அடிக்கும் கோலாகவும் கொண்டு அறிவுரை கூறும் சான்றோர் கூற்றைப் போற்றி கேட்க வேண்டும்
73. பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே
சொல் வன்மையுடைய ஒருவன் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும்
74. மெய்யுடை ஒருவன் சொல்ல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே
பேச்சுத் திறமையில்லாத ஒருவன் சொல்லும் மெய்யும் பொய் போலவே தோன்றும்
75. இருவர் தம் சொல்லையும் ஏழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந்தவர் தாம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாளாகும்மே
இருதரப்பினர் கூறுவதையும் பலமுறைக் கேட்டும், இருவரும் ஒப்ப நீதி கூறாவிடில், வழக்கில்  தோல்வியுற்றவர் மனமாற அழும் கண்ணீர் நீதி உரைப்பவர் தலைமுறைகளையும் மும்மூர்த்திகளும் முறையாகக் காத்தாலும் அழித்துவிடும்
76. பழியா வருவது மொழியா தொழிவது - நமக்குப் பழிவரும் எந்த சொல்லையும் சொல்லாது விட்டொழிக்க வேண்டும்
77. சுழியா வருபுனல் இழியா தொழிவது - சுழலாக வரும் நீர் வெள்ளத்தில் இறங்கக் கூடாது
78. துணையோடு அல்லது நெடுவழி போகேல் - தனியாகத் தொலைதூரப் பயணம் செய்யக் கூடாது.
79. புணைமீது அல்லது நெடும்புனல் ஏகேல் - தெப்பத்தின் மேல் செல்லாமல், நீண்ட பெரும் நீரோட்டத்தில் நீந்தக் கூடாது.
80. எழில் ஆர் முலை வரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே.
அழகான தனங்களையும், மை தீட்டிய கண்களையும் கொண்ட மாதர் தந்திரங்களில் மயங்கித் தகாத கொடுங்கார்யங்களில் இறங்கக் கூடாது
81. வழியே ஏகுக வழியே மீளுக - நல்ல நேர்மையான வழியிலேயே சென்று, வர வேண்டும்
82. இவை காண் உலகிற்கு இயலாம் ஆறே - இவையே உலகில் நடந்து கொள்ளும் முறை.